இறைவா!
இதயத்தில் கேள்வியை உதிர்க்காதே
கேள்விகள் அறிவுக்கு தீனி
ஆனால் அவை நம்மை பிரிக்கும் பிணி;
அறியாமை வளர்க்கும் கேள்விகளால்
இங்கு யாருக்கு பயன்?
கேள்விகளை அநாயசமாய் எழுப்பும் மனம்
திசை இல்லா படகாய் இங்கு தத்தளிக்கிறது.
உன் உண்மை பற்றி ஐயுற செய்யாதே!
ஐயம் ஒரு பேய்,
அது தரும் தற்காலிக ஆற்றலால்
நான் மதியிழந்து தவறிழைக்கிறேன்.
நற்பாதை விட்டகல்கிறேன்.
நான் யார் என்ற உண்மையை என்னை உணரச்செய்
நீ உண்மையா என்ற கேள்வியை எழுப்பாதே.
நினைவை உன் பாதம் விட்டு அகலச்செய்யாதே,
பொறுப்பு என்ற பேதமையால் திசை திருப்பாதே!
உன் அடி,
அகலகில்லேன், அகலகில்லேன்
என உருகிய மனம்
ஐந்தடி அகன்ற பின்
உரு மாறுவது ஏன்?
ஏன் பித்தாய் திரிகிறது
இவ்வுலகின் பற்றுக்கள் பின்?
மாய உலகம் எதற்காகப்படைத்தாய்?
இங்கு அனைத்து போகங்களையும் எதற்காகச்சேர்த்தாய்?
இதில் வாழும் பேற்றை ஏன் வழங்கினாய்?
நானே அசையும் பொருள்,
நானே அசையா பொருள் என்கிறாய்;
பின் மெய்ஞானத்திற்கு ஐய்ம்புலனையும் அடக்கு என்கிறாய்;
மாய உலகின் மாயங்கள் மறந்து, ஆன்மாவை நாடு என்கிறாய்;
நான் அடங்க நீ என்ன வழி செய்தாய்?
என்றும் உன் முன் நிறுத்து என்னை,
அந்த கணத்தில் தான்
ஏன் அறியாமை செயலிழக்கிறது,
ஐம்புலன்களும் அடங்குகின்றன,
நீ காட்டும் பாதையில் வழி நடத்திச்செல் என்னை.
இறைவா!
இதயத்தில் கேள்வியை உதிர்க்காதே,
கேள்விகள் அறிவை வளர்க்கும்,
ஆனால் அமைதியில் மட்டுமே ஞானம் துளிர்க்கும்.
No comments:
Post a Comment